ஊரலர் உரைத்த காதை

நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை 'வருக' எனக் கூஉய்
'பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை' என
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு
அயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமேகலையொடு மாதவி இருந்த
அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
'பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்!
உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்?
"வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும்

தண்ணுமைக் கருவியும் தாழ் தீம் குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த

ஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து" என்றே
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி
'நயம்பாடு இல்லை நாண் உடைத்து' என்ற
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
'காதலன் உற்ற கடுந் துயர் கேட்டு
போதல்செய்யா உயிரொடு நின்றே
பொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து

நல் தொடி நங்காய்! நாணுத் துறந்தேன்
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத் திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை
கணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள்

மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்
ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்
ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி

அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து
மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடுந் துயர் கூறப்
"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக!" என்று அருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
"உய் வகை இவை கொள்" என்று உரவோன் அருளினன்
மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த

சித்திராபதிக்கும் செப்பு நீ என
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
ஓங்கு திரைப் பெருங் கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து என்

Comments

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்