மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை

இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப
பொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து
உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்து
தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி

'சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன!
எத் திறத்தாள் நின் இளங்கொடி? உரை' என
'குருகு பெயர்க் குன்றம் கொன்றோன்' அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள் ஆயின் பைந்தொடி நங்கை
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள்' என்றே
தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப
'சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?

செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக!' என
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
'அம் செஞ் சாயல்! அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றே
கல்லென் பேர் ஊர்ப் பல்லோர் உரையினை
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை!
ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை' என
'வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!
ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம்

வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய
வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு

"யாங்கனம் வந்தனை என் மகள்?" என்றே
தாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில்
பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி
"என் மகள் இருந்த இடம்" என்று எண்ணி

தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
"சமணீர்காள்! நும் சரண்" என்றோனை
"இவன் நீர் அல்ல" என்று என்னொடும் வெகுண்டு
மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக்
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
"அறவோர் உளீரோ? ஆரும் இலோம்!" எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன்

பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
"என் உற்றனிரோ?" என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
தன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி
சங்கதருமன் தான் எமக்கு அருளிய

எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க!' என
'அம் சொல் ஆய் இழை! இன் திறம் அறிந்தேன்

வஞ்சி நுண் இடை மணிமேகலை தனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு' என்று
அப் பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்
பளிக்கறை திறந்து பனி மதி முகத்துக்
களிக் கயல் பிறழாக் காட்சியள் ஆகி
"கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி" என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?

'இதுவே ஆயின் கெடுக தன் திறம்!' என
மது மலர்க் குழலாள் மணிமேகலை தான்
சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழா அணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
மணி அறைப் பீடிகை வலம் கொண்டு ஓங்கி
'புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்

முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!
காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?' என்று
எரி மணிப் பூங் கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி
பல் மலர் சிறந்த நல் நீர் அகழிப்

புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை
ஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்

வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்க
பூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு
ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரிக் குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவளச் செங் கால் பறவைக் கானத்து
குவளை மேய்ந்த குடக் கண் சேதா

முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழிப் படர
அந்தி அந்தணர் செந் தீப் பேண
பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்

Comments

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்