அச்சணந்தி அடிகள், சீவகனது பிறப்பின் இரகசியத்தை அவனுக்கு உணர்த்துதல்

எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கித்
திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா
விரி மலர்க் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலும்
தெரி மலர்க் காவு சேர்ந்து பிறப்பினைத் தெருட்டல் உற்றான்.

பூவையும் கிளியும் மன்னர் ஒற்றென புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர்ப் பிண்டி நீழல்
பூ இயல் தவிசின் உச்சிப் பொலிவினோடு இருந்த போழ்தில்
ஏ இயல் சிலையினானை இப் பொருள் கேண்மோ என்றான்.

வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்குத் தேவி
பை விரி பசும்பொன் அல்குல் பைந்தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியைப் பொறியில் போக்கி
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப் பட்டான்.

புலம்பொடு தேவி போகிப் புகற்கு அருங் காடு நண்ணி
வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னைப் பயந்து பூந் தவிசின் உச்சி
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள்.

வானத்தின் வழுக்கித் திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழக்
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி
தானத்து மணியும் தானும் இரட்டுறத் தோன்றி னானே
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதி யானே.

அருந் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று
பொருந்துபு சிறுவன் கொண்டு பொலிவொடு புகன்று போகத்
திருந்திய நம்பி ஆரத் தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள்.

கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றி ஆங்கு அப்
பெரியவன் யாவன் என்ன நீ எனப் பேசலோடும்
சொரி மலர்த் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோரத்
திரு மலர்க் கண்ணி சிந்தத் தெருமந்து மயங்கி வீழ்ந்தான்.

கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழச்
சொல் பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி
நல் பல குழீஇய தம்மால் நவை அறத் தேற்றத் தேறிக்
கல் புனை திணி திண் தோளான் கவலை நீர்க் கடலுள் பட்டான்.

இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம்
நினையல் நீ நம்பி என்று நெடுங் கண் நீர் துடைத்து நீவிப்
புனை இழை மகளிர் போலப் புலம்பல் நின் பகைவன் நின்றான்
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே.

மலை பக இடிக்கும் சிங்கம் மடங்கலின் மூழங்கி மாநீர்
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்றுச்
சிலையொடு பகழி ஏந்திக் கூற்று எனச் சிவந்து தோன்றும்
இலை உடைக் கண்ணியானை இன்னணம் விலக்கினானே.

வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப் பொருள் என்று சொல்ல
ஆண் தகைக் குரவீர் கொண்மின் யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை
வேண்டுவல் என்று சொன்னான் வில் வலான் அதனை நேர்ந்தான்.

வெவ் வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் இன்னீர்
கவ்விய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி
இவ் இயல் ஒருவற்கு உற்றது இற்றெனக் கிளக்கல் உற்றான்.

Comments

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்