வஞ்சி மாநகர் புக்க காதை

அணி இழை அந்தரம் ஆறா எழுந்து
தணியாக் காதல் தாய் கண்ணகியையும்
கொடை கெழு தாதை கோவலன் தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து
வணங்கி நின்று குணம் பல ஏத்தி
'அற்புக் கடன் நில்லாது நல் தவம் படராது
கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது
அருளல் வேண்டும்' என்று அழுது முன் நிற்ப
ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைப்போள்

'எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மா பெருந் தெய்வம்
"இது நீர் முன் செய் வினையின் பயனால்
காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத்
தாய மன்னவர் வசுவும் குமரனும்
சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும்
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள்
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப்

பல் கலன் கொண்டு பலர் அறியாமல்
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
பண்டக் கலம் பகர் சங்கமன் தன்னைக்
கண்டனர் கூறத் தையல் நின் கணவன்
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும்
தீத் தொழிலாளன் தெற்றெனப் பற்றி
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு
குற்றம் இலோனைக் கொலைபுரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறு வரை ஏறி

இட்ட சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது" எனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்
மேற் செய் நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ் வினை இறுதியின் அடு சினப் பாவம்
எவ் வகையானும் எய்துதல் ஒழியாது
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு
யாங்கணும் இரு வினை உய்த்து உமைப் போல
நீங்கு அரும் பிறவிக் கடலிடை நீந்தி

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்
"மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு
ஒரு பெருந் திலகம்" என்று உரவோர் உரைக்கும்
கரவு அரும் பெருமைக் கபிலை அம் பதியின்
அளப்பு அரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து
துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றிப்
போதிமூலம் பொருந்தி வந்தருளி
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும்

இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி
எண் அருஞ் சக்கரவாளம் எங்கணும்
அண்ணல் அறக் கதிர் விரிக்கும்காலை
பைந்தொடி! தந்தையுடனே பகவன்
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
துன்பக் கதியில் தோற்றரவு இன்றி
அன்பு உறு மனத்தோடு அவன் அறம் கேட்டு
துறவி உள்ளம் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்
அத் திறம் ஆயினும் அநேக காலம்

எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்
நறை கமழ் கூந்தல் நங்கை! நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இவ் இயல்பு' எனத் தாய் எடுத்து உரைத்தலும்
"இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உருக் கொள்க" என
மை அறு சிறப்பின் தெய்வதம் தந்த

மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய்
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய
நில நாடு எல்லை தன் மலை நாடென்ன

கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க
தேரும் மாவும் செறி கழல் மறவரும்
கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ
கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து
கனக விசயர் முதல் பல வேந்தர்
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை
சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத்
தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச்
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் 

வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க
பொன் கொடிப் பெயர்ப் படூஉம் பொன் நகர்ப் பொலிந்தனள்
திருந்து நல் ஏது முதிர்ந்துளது ஆதலின்
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என்

Comments

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்