சீவகன் வளர்தல்

வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்னத்
தான் சுவைக் கொண்டது எல்லாம் தணப்பு அறக் கொடுத்த பின்றைத்
தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச் சீவக குமரன் என்ற
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான்.

நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமைப்
பால் நெறி பலவும் நீக்கிப் பருதி அம் கடவுள் அன்ன
கோன் நெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ
நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான்.

அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற
நெறியினைக் குறுகி இன்ப நிறை கடல் அகத்து நின்றார்
பொறி எனும் பெயர ஐ வாய்ப் பொங்கு அழல் அரவின் கண்ணே
வெறி புலம் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார்.

கூற்றுவன் கொடியன் ஆகிக் கொலைத் தொழில் கருவி சூழ்ந்து
மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும்
நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி
ஆற்று உறப் போதல் தேற்றாம் அளியமோ? பெரியமே காண்.

பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும்
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம் அதன் பயன் கோடல் தேற்றாம்
ஓரும் ஐம் பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றைக்
கூர் எரி கவரும் போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம்.

தழங்கு குரல் முரசின் சாற்றித் தத்துவம் தழுவல் வேண்டிச்
செழுங் களியாளர் முன்னர் இருள் அறச் செப்பினாலும்
முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகி நின்ற
கொழுங் களி உணர்வினாரைக் குணவதம் கொளுத்தல் ஆமோ.

பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக்
குழவிநாறு எழுந்து காளைக் கொழும் கதிர் ஈன்று பின்னாக்
கிழவு தான் விளைக்கும் பைங் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன்மா
உழவிர்காள்! மேயும் சீல வேலி உய்த்திடுமின் என்றான்.

சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணிப் பூணினானும்
வீழ் தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும்
ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும்
ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்.

காட்சி நல் நிலையில் ஞானக் கதிர் மணிக் கதவு சேர்த்திப்
பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிரத் தாழ் கொளுவிப் பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து
ஆட்சியில் உலகம் ஏறத் திறந்தனன் அலர்ந்த தாரான்.

நல் அறத்து இறைவன் ஆகி நால்வகைச் சரணம் எய்தித்
தொல் அறக் கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்குப்
புல் அற நெறிக் கண் நின்று பொருள் வயிற் பிழைத்த வாறும்
இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அறக் கூறி இட்டான்.

Comments

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்